Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

மனித உரிமை விவகாரங்கள் தொடர்பிலான சிறிலங்காவின் செயற்பாடுகள்: அமெரிக்கா அதிருப்தி
Date&Written by: (03.06.2008- Nitheya)

மனித உரிமை விவகாரங்கள் தொடர்பிலான சிறிலங்காவின் செயற்பாடுகள் குறித்து அமெரிக்கா அதிருப்தி தெரிவித்துள்ளது.

அண்மையில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்க மனித உரிமை மற்றும் தொழில் விவகார துணைச் செயலாளர் எரிக்கா பார்க்ஸ் ரகல்ஸ், சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் இருந்து வெளியாகும் "சண்டே ரைம்ஸ்" ஆங்கில வார இதழுக்கு அளித்த நேர்காணல்:

உங்களின் சிறிலங்காப் பயணத்தின் நோக்கம் என்ன?

மனித உரிமை சூழ்நிலை குறித்து சிறிலங்கா அரசாங்கத்துடனும், பொதுமக்கள் அமைப்புக்களுடனும் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நான் இங்கு பயணம் செய்தேன்.

பொருளாதார அபிவிருத்தி உள்ளிட்ட சிறிலங்கா அரசாங்கம் எதிர்நோக்கும் பல்வேறு சவால்கள் தொடர்பாக அரசாங்கத்துடனும், பொதுமக்கள் சமூகத்துடனும் பேச்சுவார்த்தை நடத்துவதும் எனது பயணத்தின் மற்றுமொரு நோக்காகும்.

அப்படியானால் மிக முக்கியமான நோக்கம் மனித உரிமை விவகாரங்களா?

நிச்சயமாக.... மனித உரிமைகள் பாதுகாப்பு என்பது அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளை நேரடியாகப் பாதிக்கும்.

மனித உரிமை விவகாரங்கள் மற்றும் பாதுகாப்பு விவகாரங்களில் நிலவும் பாதகத்தன்மை சிறிலங்காவுக்கு வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்ப்பதில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

மனித உரிமைகள் குறித்து, பொது அமைப்புக்கள் உங்களிடம் எவ்வாறான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்?

அவர்கள் எதிர்நோக்கும் பல்வேறு சவால்கள் குறித்து அறியக்கிடைத்தது. குறிப்பாக ஊடகத்துறையினர் எதிர்நோக்கும் பல்வேறு சவால்கள் பற்றி அறியக்கிடைத்தது.

தனிப்பட்ட பாதுகாப்பு தொடர்பாக பாரதூரமான சிக்கல்கள் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் அமைப்புக்கள் இந்த நிலைமை தொடர்பாக காட்டிவரும் முனைப்பு பாராட்டுக்குரியது. சிறிலங்காவின் எதிர்காலம் குறித்த கரிசனையுடன் பலர் செயலாற்றுகின்றனர்.

சிறிலங்கா அரச தரப்பு அதிகாரிகளை சந்தித்தபோது அவர்களிடம் எவ்வாறானதொரு கருத்தைப் பகிர்ந்து கொண்டீர்கள்?

பல சிறிலங்கா அரச அதிகாரிகளுடன் நான் பேச்சுவார்த்தை நடத்தினேன். சட்ட மா அதிபர், வெளிவிவகார அமைச்சின் செயலாளர், மனித உரிமை அமைச்சின் செயலாளர், நீதியமைச்சின் செயலாளர் உள்ளிட்ட பலரிடம் பேச்சுவார்த்தை நடத்தினேன்.

ஆயுதப் போராட்டங்களில் சிறுவர்கள் ஈடுபடுத்தப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது. அதிக சிறுவர் போராளிகள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

காணாமல் போதல்கள் தொடர்பாக நான் இந்த சந்திப்புக்களின் போது வலியுறுத்தினேன். இந்த விடயம் தொடர்பான சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. காணாமல் போதல்களுடன் தொடர்புடைய சிலர் கொழும்பில் கைது செய்யப்பட்டனர்.

எனினும், கிழக்கைப் பொறுத்த வரை காணாமல் போதல்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்கின்றது. இந்தக் கடத்தல்கள், காணாமல் போதல்களை மேற்கொள்ளும் அனைவரும் சட்டத்தின் முன்நிறுத்தப்பட வேண்டும்.

குற்றவாளிகள் குறிப்பாக அரச படைத்தரப்போ அல்லது வேறும் ஏதாவது ஆயுதக்குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்தினாலும் அவர்களை சட்டத்தின் முன்நிறுத்தப்பட வேண்டும்.

விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த விசாரணைகள் குறித்த தகவல்கள் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட வேண்டியது இன்றியமையாதது. இதன் மூலம் எவ்வாறான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து மக்கள் அறியக்கூடிய வாய்ப்புக் கிட்டும். ஏனெனில் தற்போது இவ்வாறானதொரு நடைமுறை அமுலில் இல்லை.

இந்த விசாரணைகளை அரசாங்கம் மேற்கொண்டாலும் அது தொடர்பான மக்கள் அறிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பற்ற சூழ்நிலையே தற்போது காணப்படுகின்றது.

இதன் மூலம் அரசாங்கத்திற்கு மக்கள் மத்தியில் ஒரு நல்ல அபிப்பிராயம் உருவாகக்கூடிய வாய்ப்பில்லை. குற்றங்களுக்கு தண்டனை வழங்கப்படாத நிலைமை அரசாங்கத்திற்கு அனைத்து பக்கங்களிலும் சிக்கலை ஏற்படுத்தக்கூடும்.

இந்தப் பிரச்சினைகள் குறித்து மிக உன்னிப்பாக நான் அவதானித்து வருகின்றேன். இந்தப் பிரச்சினையுடன் தொடர்புடையவர்களை சட்டத்தின் முன் கொண்டுவர வேண்டும் என நான் அரசாங்கத்தை வலியுறுத்துகின்றேன்.

கடந்த மே 21 ஆம் நாள் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை அங்கத்துவத்திற்கான வாக்கெடுப்பின் போது சிறிலங்கா தனது அங்கத்துவத்தை இழந்தமை குறித்து?

6 வலுவான நாடுகள் ஆசிய பிராந்தியத்திற்காக போட்டியிட்டன. மனித உரிமை விவகாரங்களில் அந்நாடுகளின் செயற்பாடுகளை அடிப்படையாக வைத்தே வாக்களிப்பு நிகழ்கின்றது. நாடுகளின் மனித உரிமை நிலவரங்களை முதன்மைப்படுத்தியே வாக்களிப்பு நடைபெறுகின்றது.

சிறிலங்காவின் மனித உரிமை விவகாரங்கள் குறித்து விமர்சிக்கும் அமெரிக்காவும் பல்வேறு மனித உரிமை மீறல்களை மேற்கொண்டுள்ளது அல்லவா, குறிப்பாக அபு க்ராப் சிறைச்சாலை சித்திரவதைகளை மேற்கோள் காட்டலாம்?

அமெரிக்கா நியாயமாக நடந்து கொள்வதாக ஒருபோதும் தெரிவிக்கவில்லை. எம்மை மேம்படுத்திக்கொள்ள அதிக முனைப்பு காட்டி வருகின்றோம். இதன் மூலம் நாம் குற்றங்களைப் புரியவில்லை எனப் பொருள்படாது.

அபு க்ரைப் சிறைச்சாலையில் ஏற்பட்ட தவறுகளுக்கு அரச தலைவர் முதல் அனைத்து மக்களும் தமது வருத்தத்தை தெரிவித்திருந்தனர்.

எமது அமெரிக்க ஊடகங்களிலேயே இந்தச் சம்பவம் குறித்து அதிகமாக வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டது. வேறு ஊடகங்களைவிட எமது ஊடகங்களே இந்த விடயங்களை உலகிற்கு அம்பலப்படுத்தின. இந்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு அமெரிக்க அரசாங்கம் விரிவான விசாரணைகளை முன்னெடுத்தது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரும் தண்டிக்கப்பட்டனர்.

ஜனநாயகப் பொறிமுறை உச்சளவில் செயற்பட்ட சந்தர்ப்பமாகவே நான் இதனை உணர்கின்றேன்.

எம்மிடம் எல்லாவற்றுக்கும் பதில் இல்லை. எனினும், சிறிலங்காவில் சிறந்ததொரு ஜனநயாகப் பொறிமுறை காணப்பட்டால் சுயமாக உங்களைத் திருத்திக்கொள்ள வாய்ப்பு ஏற்படும் என்பதில் ஐயமில்லை.

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. எனினும், பயங்கரவாத அமைப்புக்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதில்லை என்ற கொள்கையை அமெரிக்கா பின்பற்றி வருகின்றது. இந்த நிலைமையில் முரண்பாடு காணப்படுகிறதல்லவா?

பிரச்சினைகளுக்கு அரசியல் ரீதியான தீர்வு எட்டப்படுவதற்கு அமெரிக்கா அதிக ஆதரவு வழங்கும். இறுதியில் இராணுவ ரீதியான தீர்வு எந்த வகையிலும் பொருத்தமாக அமையாது. எனினும், இதன் மூலம் இராணுவத்தினருக்கு இந்தப் பிரச்சினையில் செய்வதற்கு ஒன்றும் இல்லை என பொருளாகாது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஓர் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமாகவே அமெரிக்கா நோக்குகின்றது. இலங்கை மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களை அமெரிக்கா வன்மையாகக் கண்டிக்கின்றது.




Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.