Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

தோல்வியடைந்த முகமாலை நடவடிக்கைக்கு யார் பொறுப்பேற்பது?: சிறிலங்கா அரசாங்கம்- படையினர் இடையே கருத்து வேறுபாடு
Date&Written by: (11.11.2007- Sivamalar)

தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்ட சிறிலங்காப் படையினரின் முகமாலை முன்நகர்வு நடவடிக்கைக்கு யார் பொறுப்பேற்பது? என்பது தொடர்பில் அரசாங்கத்துக்கும், படையினருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

கொழும்பிலிருந்து வெளியாகும் "த நேசன்" வார ஏட்டில் இடம்பெற்றுள்ள செய்தி விபரம்:

தென்னந்தோப்புக்கள், நெல் வயல்கள், பச்சை மரங்கள், மண்திட்டுகள் என இரண்டு கி.மீ. அகலமானதும், 25 கி.மீ. நீளமானதுமான நீரேரியை இங்கு குறிப்பிடவில்லை. யாழ். குடாநாட்டின் கழுத்துப் பகுதியில் உள்ள 12 கி.மீ. அகலமான பகுதியே இதுவாகும். இந்தப் பகுதிக்கு கிழக்கில் உள்ள பகுதி நீலமான கடலாகும், மேற்குப் பகுதி கடல் நீரேரியாகும்.

விடுதலைப் புலிகளுக்கும் படையினருக்கும் இடையிலான முன்னனி பாதுகாப்பு அரண்கள் மேற்கில் கிளாலியில் இருந்து, நடுவே முகமாலையை உள்ளடக்கியதாக, கிழக்கில் நாகர்கோவில் வரை நீண்டு உள்ளது. இந்த நிலைகள் குடாநாட்டின் கழுத்து பகுதிவரை மட்டுமல்லாது கடல் மற்றும் நீரேரி பகுதி வரையும் சிறிது தூரம் நீண்டுள்ளது. இது எதிர்த்தரப்பின் ஈருடக தாக்குதலை தடுக்கும் உத்தியாகும்.

இந்தப் பகுதி படை நடவடிக்கைக்கு ஏற்ற பகுதி அல்ல. பெரும் படையினர் மோதல்களில் ஈடுபடுவதற்கும் இங்கு சாத்தியங்கள் இல்லை. இது தவிர பருவ மழை காலத்தின் போது இந்தப் பகுதி சேறும் சகதியுமாக மாற்றமடைவதனால் அங்கு பிரதான போர் டாங்கிகளையும், துருப்புக்காவி வாகனங்களையும் பயன்படுத்துவது கடினமானது.

தரைத் தாக்குதல் எம்ஐ-24 உலங்குவானூர்திகள் தாக்குதல்களில் ஈடுபடுவதற்கும் தற்போது காலநிலை சாதகமற்றது. இந்த நிலையிலும் கடந்த புதன்கிழமை படையினரால் பெரும் எடுப்பிலான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது. சந்தர்ப்பவசமாக கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம் 11 ஆம் நாள் முகமாலையில் படையினர் பேரழிவைச் சந்தித்ததன் 13 ஆவது மாத நிறைவு இன்றாகும்.

கடந்த ஆண்டு தாக்குதலின் போது 175 படையினர் கொல்லப்பட்டதுடன், 400 பேர் படுகாயமடைந்தனர். கடந்த ஆண்டு ஒகஸ்ட் 11 ஆம் நாள் விடுதலைப் புலிகளும் முகமாலையில் வலிந்த தாக்குதலை நடத்தியிருந்தனர். கடந்த ஆண்டு நடைபெற்ற இந்த இரு சமர்களும் இந்தப் பகுதி தற்காப்புச் சமருக்கே உகந்தது என்பதை உணர்த்தியிருக்கும். படையினருக்கு அனுகூலமுள்ள கவசப்படையும், வான்படையினரும் கூட இந்த களத்தில் பயன்படவில்லை.

விடுதலைப் புலிகளின் துல்லியமான பீரங்கித் தாக்குதலானது படையினருக்கு கவலை அளிப்பதாகவே உள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியான மேஜர் ஜெனரல் சந்திரசிறீ மீதும் பீரங்கித் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. எனினும் அது வெற்றிபெறவில்லை. ஆனால் இந்த வருடத்தின் தொடக்கத்தில் கவசத்தாக்குதல் படை பிரிகேட்டின் கட்டளை அதிகாரியான லெப். கேணல் ரால்ஃப் நுகெரா மீது வெற்றிகரமான பீரங்கி தாக்குதலை புலிகள் மேற்கொண்டிருந்தனர்.

எல்லவற்றையும் விட இந்தக் களமுனையானது திறந்த பகுதியாகும் எனவே விடுதலைப் புலிகளின் பீரங்கி மற்றும் மோட்டார் தாக்குதல்களுக்கு படையினர் இலகுவில் இலக்காகிவிடலாம். இந்த நிலையிலும் படையினர் ஏன் கடந்த புதன்கிழமை நடவடிக்கையை மேற்கொண்டனர்? காலநிலையும் பாதகமாகவே இருந்தது.

இந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட படை நடவடிக்கை குறித்து வேறுபட்ட இடங்களில் இருந்து பலதரப்பட்ட காரணங்கள் கூறப்படுகின்றன. ஆனால் நாம் அதற்கு முன் மற்றுமொரு காரணத்தை பார்க்க வேண்டும்.

விடுதலைப் புலிகளின் தாக்குதல்களுக்கு எதிராகவே தாம் தாக்குதல் நடத்துவதாக படைத்தரப்பு தொடர்ந்து தெரிவித்து வருகின்றது. இந்த புதன்கிழமையும் படையினரின் பிரச்சார மையம் அதனையே தெரிவித்திருந்தது. ஆனால் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயா ராஜபக்ச, படையினரே நடவடிக்கையை மேற்கொண்டதாக தெரிவித்திருந்தார். ஏனெனில் அவரால் அதனை மறைக்க முடியவில்லை.

முன்னர் கைது செய்யப்பட்ட படையினர், ஆயுதங்கள் தொடர்பான புகைப்படங்களை விடுதலைப் புலிகள் வெளியிடுவதுண்டு. இது படையினர் தொடர்பான நம்பிக்கையீனத்தை ஏற்படுத்து விடும். இம்முறையும் படையினரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்களின் புகைப்படங்களை அவர்கள் வெளியிட்டிருந்தனர்.

போர் நிறுத்த ஒப்பந்தமும், எல்லைகளை மதிப்பதும் காகிதத்தில் மட்டும் உள்ளதை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் அறிவார். எனவே அதனை மீறுவது குறித்து அவர் கவலைப்படவில்லை.

அரசியல் இலாபங்களுக்கான படை நடவடிக்கைகள்

முழு நடவடிக்கையும் அரசியல் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டவை. வரவு-செலவு திட்டத்தை அறிவிக்கும் போது புதிய முன்னரங்க நிலையையும் அறிவிக்கும் பொருட்டே பெரிய அளவிலான படை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. முன்னைய படை நடைவடிக்கைகயின் போதும் தற்போதைய அரசு, அரசியல் இலாபங்களை அடைய முற்பட்டிருந்தது.

கடந்த ஆண்டு செப்ரம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட சம்பூர் மீதான படை நடவடிக்கையை சுதந்திரக் கட்சியின் கட்சி கூட்டத்தில் தெரிவித்து பெரும் அரசியல் இலாபங்களை பெறும் வண்ணம் அரசு சில நாட்கள் தாமதப்படுத்தியிருந்தது.

நிறைவேற்று அதிகாரமுள்ள அரச தலைவர் பதவியை முடிவுக்கு கொண்டு வருவதாக அறிவிக்கப்பட்ட நாளில் சந்திரிகா அரசு "முன்னோக்கிப் பாய்தல்" படை நடைவடிக்கையை மேற்கொண்டிருந்தது. எனினும் அது மேற்கொள்ளப்பட்டதை விட விரைவாக தளம் திரும்பியிருந்தது.

கடந்த ஆண்டு முகமாலையில் பெறப்பட்ட அனுபவத்தில் இருந்து இம்முறை இராணுவம் தனது இழப்புக்களை இயலுமானவரை குறைவாக்கியுள்ளது.

கிளாலி, முகமாலை, நாகர்கோவில் களமுனைகள் தற்காப்புச் சமருக்கே ஏற்றவை. வான்படையினர் தாம் தாக்கி அழித்துள்ளதாக கூறிய போதும் விடுதலைப் புலிகள் பூநகரியில் உள்ள பீரங்கி நிலைகளையும், பளையில் உள்ள மோட்டார் நிலைகளையும் பேணி வருகின்றனர். எனவே படையினர் மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளையே இந்தப் பகுதியில் மேற்கொள்ள வேண்டும்.

விடுதலைப் புலிகள் தமது தற்கொலைப் படையினரையும், மட்டுப்படுத்தப்பட்ட உறுப்பினர்களையும் கொண்டு உயர் ரக இலக்குகளை அழிப்பதையே முதன்மைப்படுத்தி வருகின்றனர். அவர்கள் பெரும் தாக்குதல் சமரை தவிர்த்தே வருகின்றனர். ஆனால் நவம்பர் மாத இறுதிப் பகுதியில் விடுதலைப் புலிகள் இந்த அச்சில் தாக்குதலை நடத்தி யாழ். குடாநாட்டை நோக்கி முன்நகரலாம் எனப் படைத் தரப்பின் ஒரு பிரிவினர் நம்புகின்றனர்.

படையினரின் வன்னி மீதான நடவடிக்கையை தடுப்பதில் விடுதலைப் புலிகள் ஈடுபட்டு வருகின்றனர். சிறிலங்கா வான்படையினர் விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்செல்வன் மீது தாக்குதலை நடத்திய பின்னர் நிகழ்த்தப்பட்ட இந்த தாக்குதல் மிக முக்கிய வாய்ந்ததாக அமைந்திருந்தது. கடற்படையினர் விடுதலைப் புலிகளின் 4 கப்பல்களையும் அண்மையில் அழித்திருந்தனர்.

கிழக்கில் படையினர் குறிப்பிடத்தக்களவு வெற்றியைப் பெற்றிருந்தனர், ஆனால் வன்னியில் மெதுவாக முன்நகர்வதை விடுத்து திடீரென இரத்தம் சிந்தியுள்ளனர்.

படையினர் - அரசாங்கம் கருத்து வேறுபாடு?

வடபகுதியில் சரியான நேரம் வரும் வரை மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளே தேவையானது. போரானது இயலுமானவரை படை ஜெனரல்களின் பொறுப்பில் விடுபட வேண்டும்.

ஆனால் அரசியல் இலாபங்களுக்காக சமர்களை தெரிவு செய்வது மிகவும் ஆபத்தானது. கடந்த வருடம் படையினர் வலிந்த தாக்குதல்களை நடத்தப் போவதில்லை என அனைத்துலக சமூகத்தை நம்பவைக்க மகிந்த முற்பட்ட போது முகமாலை சமர் நிகழ்ந்தது.

படைத்துறையானது அரசின் ஒரு பகுதியாகும். எனவே அரசின் பொதுவான கொள்கைகளுக்கு அமைய பாதுகாப்பு அமைச்சர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், படை அதிகாரிகள் நடவடிக்கைகளை திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும்.

போரிலும் சமாதானத்திலும் அரசு மாறினாலும் அதன் கொள்கைகளில் மாற்றம் ஏற்படக்கூடாது.

போரில் எல்லா சமர்களும் வெல்லப்படுவதில்லை. வியட்நாம் போரில் அமெரிக்கா பெரும்பாலான சமர்களில் வெற்றி ஈட்டியிருந்தது. ஆனால் போரை இழந்து விட்டது. சில நேரங்களில் நீங்கள் எடுக்கும் முடிவுக்கான விலைகளை நீங்களே செலுத்த வேண்டியிருக்கும்.

வரவு-செலவுத் திட்டம் தொடர்பான இரண்டாவது அறிக்கைக்குப் பின்னரான வாக்கெடுப்பானது மகிந்த அரசின் தலைக்கு மேல் வாள் தொங்கிக் கொண்டிருப்பதைப் போன்றது.

அதாவது வரவு-செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டால் நாடாளுமன்றம் தானாக கலைக்கப்பட்டதாகவே அர்த்தம்.

அரசு தப்புவதை தீர்மானிக்கும் முக்கிய அரசியல் கட்சியாக ஜேவி.பி. உள்ளது. அது விடுதலைப் புலிகளை முறியடிப்பதை ஆதரிப்பதுடன், படையினரின் நடவடிக்கைக்கும் முழுமையான ஆதரவை அளித்து வருகின்றது.

நாடாளுமன்றத்தில் வரவு-செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் போது முகமாலையில் மேற்கொள்ளப்பட்டது அரசியல் மயப்படுத்தப்பட்ட படை நடவடிக்கையா? படையினருக்கு 165 பில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்ட போதும் முகமாலையில் ஏற்பட்ட தோல்வி எல்லோருடைய கண்களையும் திறந்திருக்கும்.

தமிழ்செல்வனை நினைத்து விடுதலைப் புலிகள் வருத்தத்தில் இருப்பார்கள் என்ற எதிர்பார்ப்பிலா பெருமெடுப்பிலான நடவடிக்கை படையினரால் மேற்கொள்ளப்பட்டது?

இறக்கும் போது தமிழ்ச்செல்வன் பூநகரிப் பகுதி கட்டளைத் தளபதியாக பணியாற்றிக் கொண்டிருந்தார். அவர்கள் வருத்தத்தில் இருந்தார்களோ இல்லையோ எதிர்த்தாக்குதலானது கேணல் தீபனினால் திறமையாக திட்டமிடப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.

இது அனுராதபுரம் வான்படைத் தளம் மீதான தாக்குதலில் இருந்து வேறுபட்டது.

அங்கு விடுதலைப் புலிகள் தாக்கும் போது படையினர் சுப்பர் குறஸ், சுப்பர் ஸ்ரார் களியாட்டத்தில் மூழ்கியிருந்தனர்.

எதிரிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் மீது தாக்குதலை நடத்தும் போது வேறு சில காரணிகளையும் கவனத்தில் எடுக்க வேண்டும்.

அந்தப் பகுதிகளில் பொறிவெடிகள் இருக்கலாம். மிதிவெடிகள் கிளைமோர் குண்டுகளை வெடிக்க செய்யலாம், பொறிவெடிகள், போலியான காவலரண்கள், குழிகள் என்பன ஒரு உயர்ரக கெரில்லா அமைப்புக்கு எதிரான சமரில் மரபு வழியிலான படையினர் சந்திக்கும் நெருக்கடிகள்.

"ஜெயசுக்குறு" படை நடவடிக்கைக்குப் பின்னர் படையினர் அதன் கடுமையை உணர்ந்திருந்தது. பெருமளவான படையினர் விடுதலைப் புலிகளின் பகுதிக்குள் நகர்வது பேரழிவை ஏற்படுத்தலாம். விடுதலைப் புலிகளுக்கு எதிராக சிறிய குழுக்களாக படையினரை வன்னியில் ஈடுபடுத்தி வருகின்ற போதும் அது குடாநாட்டின் தென்பகுதியில் சாத்தியமற்றது. பருவமழையின் போதும், விடுதலைப் புலிகளின் பீரங்கி மற்றும் மோட்டார் நிலைகள் பூநகரி, பளைப் பகுதியில் உள்ள வரையிலும் இந்த பகுதி மீதான படை நடவடிக்கை சாத்தியமற்றது.

முகமாலைப் பகுதி மீதான படை நடவடிக்கை கைவிடப்பட்ட பின்னர் வியாழக்கிழமை இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா யாழ். குடாநாட்டிற்கு பயணம் மேற்கொண்டிருந்தார். அவர் அங்கு யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறியை சந்தித்தார்.

அரசியல் காரணங்களுக்காக மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையை அவர் கைகழுவி விட்டதாக சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு முகமாலையில் நடைபெற்ற சமருக்கான பொறுப்பை சரத் பொன்சேகா பாதுகாப்பு சபைக் கூட்டத்தில் ஏற்றிருந்தார். ஆனால் இந்த தடவை யார் அதற்கான பொறுப்பை ஏற்கப்போகின்றனர்?

முகமாலை படை நடவடிக்கை விபரம்

இந்தப் படை நடவடிக்கையின் நோக்கம் முகமாலையில் உள்ள விடுதலைப் புலிகளின் முன்னணி அரண்களை கைப்பற்றுவதே.

இந்த நடவடிக்கையில் படையினரின் பின்னிருப்பு தாக்குதல் பிரிவான 53 ஆவது படையணியும், அந்தப் பகுதியின் பாதுகாப்புக்கு பொறுப்பான 55 ஆவது படையணியும் பங்குபற்றியிருந்தது.

53 ஆவது படையணியின் கட்டளைத் தளபதியான பிரிகேடியர் சமந்த சூரியபண்டாரா மற்றும் 55 ஆவது படையணியின் கட்டளைத் தளபதியான பிரிகேடியர் கமல் குணரட்ன ஆகியோருடன் இந்த நடவடிக்கை தொடர்பாக யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி சந்திரசிறி தொடர்புகளை மேற்கொண்டிருந்தார். இதற்காக 300-க்கும் மேற்பட்ட படையினர் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

53 ஆவது படையணியின் வான்நகர்வு பிரிக்கேட்டைச் சேர்ந்த 5 ஆவது கெமுனுவோச், 1 ஆவது விஜயபா இலகு காலாட்படை றெஜிமென்ட் ஆகிய படைப்பிரிவினர் இந்த தாக்குதலில் ஈடுபட்டிருந்தனர்.

53 ஆவது படையணி வான்நகர்வு பிரிகேட், 3 ஆவது பிரிகேட், கவசத்தாக்குதல் பிரிகேட் ஆகிய பிரிகேட்டுக்களை கொண்டது. எனினும் கவசத்தாக்குதல் பிரிகேட் இந்த நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படவில்லை.

முகமாலை முன்னணி அரண்களில் 55 ஆவது படையணியைச் சேர்ந்த 4 ஆவது இலங்கை இலகு காலாட்படை பிரிவு, 7 ஆவது விஜயபா றெஜிமென்ட், 4 ஆவது கெமுனுவோச், 1 ஆவது இலங்கை இலகுகாலாட்படை ஆகியன ஈடுபட்டு வருகின்றன. வான்நகர்வு படையணியின் நடவடிக்கைக்கு உதவுமாறு இந்தப் படைப்பிரிவினருக்கும் உத்தரவு வழங்கப்பட்டிருந்தது.

விடுதலைப் புலிகளின் பதுங்குகுழிகளை அழிக்கும் பொருட்டு படையினர் அவர்களின் முன்னணி அரண்களை நோக்கி நகர்ந்தனர்.

படையினருக்கு உதவியாக பல்குழல் உந்துகணை செலுத்தி மற்றும் கடுமையான எறிகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

விடுதலைப் புலிகளும் 81 மி.மீ, மற்றும் 120 மி.மீ மோட்டார் தாக்குதல்களை பளையில் இருந்தும், பீரங்கித் தாக்குதலை பூநகரியில் இருந்தும் மேற்கொண்டிருந்தனர்.

இந்த நடவடிக்கையில் 11 படையினர் கொல்லப்பட்டதாகவும், 50 பேர் படுகாயமடைந்திருந்ததாகவும் படைத்தரப்பு தெரிவித்திருந்தது.

படையினரிடம் இருந்து கைப்பற்றிய ஆயுதங்களின் புகைப்படங்களை விடுதலைப் புலிகள் வெளியிட்டிருந்தனர்.

விடுதலைப் புலிகளின் பொறிவெடிகளை செயலிழக்கச் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த படையினரின் பொறியியல் பிரிவைச் சேர்ந்த படையினரும் காயமடைந்திருந்தனர்.

பொறிவெடிகள், குழிகள் போன்றவற்றை தோண்டியும் விடுதலைப் புலிகள் படையினரை பொறிக்குள் சிக்க வைத்திருந்தனர்.

வான் படையினர் எம்ஐ-24 ரக தாக்குதல் உலங்குவானூர்தியை பயன்படுத்திய போதும் பாதகமான காலநிலை காரணமாக அதன் பயன்பாடு மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருந்தது.

எனினும் இந்த படை நடவடிக்கையில் 20 படையினர் கொல்லப்பட்டதுடன், 115 பேர் காயமடைந்ததாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.