Kjw; gf;fk;
vk;ikg; gw;wp
kPs;gpuRu chpik
fUj;J
ftpij
cq;fs; fUj;J
njhlHGfSf;F
News in English
Computer
Day in Pictures
njd;wy; cyf thndhyp
 

njd;wypy; Njl
nrhy;:

விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் அல்லர்- தமிழினத்தின் கேடயம்: கி.வீரமணி
Date&Written by: (08.11.2007- Ramani)

தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் அல்லர்- தீவிரவாதிகள் அல்லர்- அவர்கள் தமிழினத்தின் கேடயம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

சென்னையில் திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் சார்பில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட போராளிகளுக்கான வீரவணக்க நிகழ்வில் கி. வீரமணி பேசியதாவது:

மிகுந்த துயரத்தோடும், அதே நேரத்திலே உணர்ச்சி யோடும் இங்கு நாம் கூடியிருக்கின்றோம்.

விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் அமைதிப் பேச்சுவார்த்தையை நடத்திய ஒரு தளபதி சு.ப.தமிழ்ச்செல்வன், மற்றும் அய்ந்து தமிழ்ப் போராளிகளுக்கும் வீரவணக்கம் செலுத்த இங்கு நாம் கூடியிருக்கின்றோம்.

30 கல் தொலைவில் உள்ள நாட்டால் வேறுபட்டிருந்தாலும், நாம் வீட்டால் ஒன்றுபட்டவர்கள், இனத்தால் ஒன்றுபட்டவர்கள். அப்படிப்பட்ட நம் இனத் தமிழர்கள் வாழ்வுரிமைப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்ற பொழுது சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட அறுவரை இழந்திருக்கின்றோம். தமிழர்களின் உணர்வை கலைஞர் பிரதிபலித்திருக்கின்றார்

ஈழத் தமிழர்கள் மறைந்ததற்காக - தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் தமிழர் களின் ஒட்டுமொத்த உணர் வைப் பிரதிபலிக்கின்ற வகை யிலே இரங்கல் கவிதையை வெளியிட்டார்கள். தமிழர்களுடைய உணர்வுகளை கலைஞர் அவர்கள் காட்டியிருக்கின்றார்கள்.

உலக வரலாற்றிலே இப்படி ஒரு விடுதலை போராட்டம் நடந்ததில்லை ஒப்பாரும், மிக்காரும் இல்லாத அளவிற்கு எந்த நாட்டிலும் இப்படி ஒரு போராட்டத்தை தம்பி பிரபாகரன் தலைமை ஏற்று நடத்திக் கொண்டிருக்கின்றார். போர்க்களத்தில் இழப்புக்கள் வரும் துன்பங்கள், துயரங்கள் வரத்தான் செய்யும். நாம் நிறைய இழந்திருக்கின்றோம் என்ற வேதனை நமக்கு இருந்தாலும் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது தெரியும்.

இது அழிந்து கொண்டிருக்கின்ற ஒரு இனம் அல்ல. இது வீரத்தின் ஊற்றுக்கண்.

நமக்கு நண்பர்கள் யார்? இந்த இனத்திற்கு எதிரிகள் யார்? பகைவர்கள் யார் என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். சு.ப.வீரபாண்டியன், தொல். திருமாவளவன் மற்றும் அத் துணை பேரும் இங்கு பேசிய கருத்துக்களை அப்படியே வழி மொழிய நான் கடமைப்பட்டிருக்கின்றேன்.

தமிழனுக்கு அழுவதற்குக் கூட உரிமை இல்லையா?

இதைத்தான் ஒட்டுமொத்தத் தமிழர்களின் பிரதிநிதியாக இருக்கக் கூடிய முதல்வர் கலைஞர் அவர்கள் சு.ப.தமிழ்ச்செல்வன் மறைந்ததை ஒட்டி கவிதையாக எழுதினார்.

கலைஞர் அவர்கள் ஆட்சிக்காக வாழக் கூடியவர் அல்லர். தமிழின மீட்சிக்காக வாழக்கூடியவர். தமிழர்களுடைய ஒட்டு மொத்தக் குரலை அவர் பிரதிபலித்திருக்கின்றார். அவர் ஆட்சியிலே இருப்பதால் தான் இந்த நிகழ்ச்சியையே நடத்த முடிகிறது.

இதில் என்ன தவறு? இங்கு சு.ப.வீரபாண்டியன் அவர்கள் சொன்னது போல வேறு ஒரு ஆட்சி இருந்து, இந்த நிகழ்ச்சியைத் தடை செய்து, எங்களை கைது செய்து சிறையில் அடைத்தாலும் இதே உணர்வைப் பிரதிபலிக்கக் கூடியவர்கள் தான் நாங்கள். இந்த உணர்வினைத் தடை செய்துவிட முடியுமா? முடியாது.

இந்த உணர்வுகளைச் சொல்வதினால் எங்களை தேசத்துரோகிகள் என்று சொன்னால் தமிழர்களே, தமிழர்களே, இப்படி சொல்லுகிறவர்கள் யார் என்பதை நீங்கள் அடையாளம் காணுங்கள்.

சிங்கள அரசு, போர் முறையிலே குறைந்த பட்சம் உள்ள தர்ம நியாயங்களை, இதுவரை பின்பற்றியிருக்கின்றதா? கிடையாது.

2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் திகதி இலங்கையின் தமிழ்ப் பகுதியில் உள்ள வாகரையில் இருந்த, இடம் பெயர்ந்தோருக்கான முகாமின் மீது, சிங்கள இராணுவம் தாக்குதல் நடத்தி அப்பாவி மக்கள் பலரைக் கொன்றது. அமெரிக்காவும் பிற நாடு களும் கண்டித்தன. நோர்வே நாட்டின் பன்னாட்டு வளர்ச்சி அமைச்சர் எரிக் சொல்ஹைம் தன் வருத்தத்தைத் தெரிவித்தார்.

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மதிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இராணுவத் தாக்குதலை நிறுத்த வேண்டும் என்றார். உள்நாட்டில் இடம்பெயர்ந்தோருக்குப் பாதுகாப்பு அளிப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்த் தேசிய அணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அய்.நா. பொதுச் செயலாளருக்குக் கடிதம் எழுதினார்கள். சிங்கள அரசு மறுநாள் வருத்தம் தெரிவித்தது. வாகரை கொடுங் கொலைகளை அடுத்து இரண்டு நாள் கழித்து 2006 ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் திகதி கொழும்பில், தமிழ்த் தேசிய அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜ ரவிராஜ் அவர்கள் பட்டப் பகலில் வீட்டில் இருந்து அலுவலகம் செல்லுகையில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாதவர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

ஸ்காட்லாந்து யாட் காவல்துறையின் உதவியுடன் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, தண்டிக்கப்படுவார்கள் என மகிந்த ராஜபக்சே கூறினார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே ஈழத்திலே உள்ள விடுதலைப் புலிகளின் உயிர்த் தியாகம் சாதாரணமானதா? இனி வரக்கூடிய மக்களாவது சுதந்திரக் காற்றை சுவாசிக்க வேண்டும் என்பதற்காக களச்சாவை யாசித்துப் போட்டிப் போட்டுக் கொண்டு பெறுகிறார்கள்.

உலக வரலாற்றிலே யாருடைய ஆதரவும் இல்லாமல் முப்படைகளையும் நடத்தக்கூடிய ஆற்றலைப் பெற்றவர் தான் தம்பி பிரபாகரன்.

விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் அல்லர், அவர்கள் தீவிரவாதிகள் அல்லர். நம்முடைய இனத்தவர்களுக்கு கேடயமாக, வாளாக இருக்கக் கூடியவர்கள். எனவே நம் இனத்தவரை எதிர்ப்பவர்கள் யார் என்பதை அடையாளம் காணுங்கள்.

ஈழத் தமிழர்களின் தொடர்பாக தமிழக மக்களின் உணர்வு என்பது கனன்று கொண்டிருக்கின்ற நெருப்பு. அதை எதிர்க்கின்ற குப்பைகள் அந்தத் தீயில் கருகிப் போகும் என்றார் கி. வீரமணி.

இனவுணர்வுள்ள மக்கள் பெருந்திரளாக இக்கூட்டத்தில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கூட்டத்தில் மு.மாறன், சோழ நம்பியார், மருத்துவர் வேலாயுதம், "தமிழ் முழக்கம்" சாகுல் அமீது, திரைப்பட இயக்குநர் செல்வபாரதி, பா.ம.க. துணைப் பொதுச்செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன், திரைப்பட இயக்குநர் சீமான், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சு.ப.வீரபாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் பொதுச் செயலாளர் தொல்.திருமாவளவன் ஆகியோர் வீரவணக்க உரைகளை நிகழ்த்தினர்.
Copyright © 2005-10 ThenralWorldNews.com, All Rights Reserved.